Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழக அரசாணை எண் 187ஐ ரத்து செய்ய வேண்டும்: கலெக்டரிடம் வணிகவியல் பள்ளிகள் சங்கம் மனு

திருச்சி, ஜூன் 3: தமிழக அரசாணை எண் 187ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் வணிகவியல் பள்ளிகள் சங்கம் மனு அளித்துள்ளது. தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் வௌியிட்ட அரசாணையின்படி அரசு வணிகவியல் தேர்வுகள், வணிகவியல் பயிலகங்கள், தமிழ் 99 விசைப்பலகை பயன்படுத்தி மாணாக்கர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. மேலும் இந்த அறிவிப்புக்கு ஏற்றாற்போல் வணிகவியல் பயிலகங்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், மாணவர்களின் நலன் கருதி, சில தேர்வுகள் மட்டும், பழைய தட்டச்சு இயந்திர விசைப்பலகையை கொண்டு தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் ரத்து செய்திட வேண்டும் என்று கூறி தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் சார்பில் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் 4 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், தட்டச்சுத் தேர்வினை சுமார் 5ஆயிரம் அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பள்ளிகளின் 2 லட்சம் தட்டச்சு இயந்திரங்கள் மூலமாக மட்டுமே தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எப்பொழுதும் போல் நடத்திட வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பள்ளிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன் கணினித் தேர்வினை நடத்திடவும், குறைந்தபட்ச கல்வித் தகுதியான தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்களையே சிஓஏ தேர்வு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.