Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தனித்துப் போட்டியிட்டபோது 41,000 ஓட்டுபாஜ உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணியிட்டு 15 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக கிடைத்தது

விழுப்புரம், ஜூலை. 14: தமிழகத்தில் கடந்த 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டியில் தனித்துப் போட்டியிட்ட பாமக 41,000 ஓட்டுகளை வாங்கியது. அதிமுக, தேமுதிக கட்சியை சேர்ந்த பல வாக்குகளும், மேலும் அந்த கட்சியின் வன்னியர் வாக்குகளும் விழுந்து இருக்கும். பாஜ உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு 15 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக கிடைத்து இருப்பது பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வட மாவட்டங்களில் வலிமையாக இருப்பதாக கூறிவரும் பாமக ஒவ்வொரு தேர்தலின் போதும் மாறி, மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 10 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் தர்மபுரியை தவிர்த்து மற்ற அனைத்து இடத்திலும் டெபாசிட் இழந்தது. தேஜ கூட்டணியில் சேரும்போதே பாமகவில் நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனையும் மீறி கூட்டணி வைத்து ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தேஜ கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிட விருப்பம் தெரிவித்தது. இதனை ஏற்று பாஜக தலைவர் அண்ணாமலை விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து தேஜ கூட்டணியில் பாஜ மற்றும் கூட்டணி கட்சிகளான அமமுக, தமாக, அதிமுக உரிமைமீட்பு, ஐஜேகே, இந்திய மக்கள் கட்சி உள்ளிட்ட 6 கூட்டணி கட்சி பலத்துடன் பாமக இடைத்தேர்தலில் களமிறங்கியது. நேற்று வெளியான தேர்தல் முடிவு 56,296வாக்குகள் மட்டுமே பெற்றது.

இதே கடந்த 2016 சட்டமன்ற பொது தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக 41,428 வாக்குகளை பெற்றிருந்தது. தற்போது 6 கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட நிலையில் கடந்த 2016 தேர்தலை விட வெறும் 15,000 வாக்குகளை மட்டுமே கூடுதலாக பாமக பெறமுடிந்தது. மேலும் அதிமுக, தேமுதிக புறக்கணித்து உள்ளதால் அக்கட்சியை சேர்ந்த சில வாக்குகளும் பாமகவுக்கு விழுந்து இருக்கும். இதுபோன்று அதிமுக, தேமுதிகவில் உள்ள வன்னியர்கள் வாக்குகளும் பாமகவுக்கும் கிடைத்து இருக்கும். 6 கட்சியுடன் கூட்டணியில் சேர்ந்தும் அதிக வாக்குகள் பெறாததால் தேஜ கூட்டணி மீது பாமக அதிருப்தியில் உள்ளது.

அதேபோல் தேஜ கூட்டணி பிரசாரத்துக்கு வந்த அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டவர்கள் அதிமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். பாமக, அதிமுகவினரின் வாக்குகளை எதிர்பார்த்திருந்து கடைசி வரை அவர்களை விமர்சனம் செய்யாமல் பிரசாரம் மேற்கொண்டது. ஆனால் ஒரே மேடையில் அதிமுகவை கடுமையாக பாமகவின் கூட்டணி தலைவர்கள் விமர்சித்ததால் அந்த ஓட்டுகளுக்கு வேட்டு வைத்ததாலும் பாமகவின் வாக்கு வங்கி குறைந்ததாகவும், இதற்கு காரணமான கூட்டணி கட்சித் தலைவர்கள் மீது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.