தஞ்சாவூர், டிச.7: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சோலார் விளக்குகளை சீரமைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரத்தநாடு, கறம்பக்குடி, செல்லம்பட்டி, பாச்சூர் மருத்துவ கல்லூரி புதிய பேருந்து நிலையம், அம்மாபேட்டை பாபநாசம், நாஞ்சிக்கோட்டை வல்லம், ஆகிய ஊர்களுக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், தினமும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் அலுவலகம் செல்வோர், தினசரி கூலிவேலைக்கு செல்வோர் காலை 6:00 மணி முதல் இரவு 9மணி வரை பேருந்துக்காக கூடுவர்.
இதனால், காலை முதல் இரவு வரை எந்த நேரமும் பரபரப்பாகவே காணப்படும். இந்த பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து மார்க்கத்திலும் அமைக்கப்பட்டுள்ள சோலார் லைட்டுகள் கடந்த ஆறு மாத காலமாக எரியாமல் உள்ளன. இதனால், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால், இரவு நேரத்தில் வரும் பொதுமக்கள் பேருந்துக்கு காத்திருக்க அச்சப்படுகின்றனர். எனவே, பழுதடைந்த சோலார் விளக்குகளை சீரமைக்கவும், வயதானோர், பெண்கள், குழந்தைகள் பேருந்துக்காக காத்திருக்கப் போதுமான இருக்கை வசதிகளை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், வணிகர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


