திண்டுக்கல், நவ. 15: திண்டுக்கல் அருகேயுள்ள இரண்டெல்லைப்பாறை கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சேசுமேரி (47). தம்பதியர் இருவரும் கடந்த நவ.10ம் தேதி டூவீலரில் ரெட்டியபட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். பொன்னகரம் அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அருள்ராஜ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் டூவீலரிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மேல் சிகிச்சைக்காக சேசுமேரி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அருள்ராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ கிருஷ்ணவேணி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.


