Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டிபி மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பு புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா உறுதி அச்சப்பட வேண்டாம் என சுகாதார இயக்குநர் அறிவிப்பு

புதுச்சேரி, மே 21: புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் பெரிய அளவில் பாதிப்பில்லை என்பதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் சிலருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் கூறியதாவது: சமீபகாலமாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் என்ன நிலவரம் என தெரியப்படுத்தவும், முன்னேற்பாடுகள் என்ன செய்திருக்கிறோம் என்பதை மக்களிடம் தெரிவிக்கிறோம். புதுச்சேரியில் ஒன்றிரண்டு கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் தான் வருகிறது. கடந்த வாரம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு டெங்கு, சிக்குன் குனியா, கொரோனா பரிசோதனை செய்தோம்.

அதில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கிறோம். அதன்படி கொரோனா பாசிட்டிவ் என அடையாளம் காணப்பட்ட 12 பேர் புதுச்சேரி அரசு மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் தனிவார்டு அனுமதித்து சிகிச்சையளிக்கிறோம். இதில் 9 பேர் குணமாகி சென்றுவிட்டனர். மீதமுள்ளவர்கள் படிப்படியாக குணமடைந்து வருகின்றனர். பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 நாள் சிகிச்சைக்கு பிறகு குணமாகிவிடுவார்கள். வேறு எந்த பிரச்னையும் இல்லை. தமிழகத்தை போல் அதிக எண்ணிக்கையில் தொற்றுகள் வரலாம் என்ற அடிப்படையில் கோரிமேடு டிபி மருத்துவமனையில் 10 ஐசியூ படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு ஏற்படுபவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும். அவசரத்தேவைக்காக இரண்டு வெண்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை.

பொதுமக்கள் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவும், மூக்கு வாயில் அடிக்கடி கை வைக்க வேண்டாம். சளி உள்ளவர்கள் இருமும் போது துணியால் மூடிக்கொள்ள வேண்டும். கொரோனா நோயாளிகள் முககவசம் அணிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை. இது குறித்த அறிவுறுத்தல்கள் மத்திய அரசிடம் இருந்து இன்னமும் வரவில்லை. கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள் இன்னமும் வெளியிடவில்லை. தமிழகத்தில் தொற்று அதிகரிப்பால், நாமும் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. சளி, இருமல் அதிக பாதிப்பு இருந்தால் அரசு மருத்துவமனையை அணுகவும், அதே நேரத்தில் தேவையற்ற அச்சமும் தேவையில்லை. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கூடுதல் படுக்கை வசதிகள் சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் மேலும் கூறுகையில், ‘சமூக ஊடகங்களில் கதிர்காமம் மருத்துவமனையில் தெரு நாய்கள் உலா வருவது குறித்து வீடியோ வெளியாகியுள்ளது.

மருத்துவமனை இயக்குநரிடம், நகராட்சியிடம் பேசி தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பொது மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிஸ் எதிர்ப்பு மருந்துகள் கிடைக்கிறது. அண்டை மாநிலத்தில் இருந்து வரும் யாரையும் நாம் புறக்கணிப்பதில்லை. படுக்கை பற்றாக்குறை பிரச்னைகளை தீர்க்கும் வகையில் கூடுதல் வார்டுகளை ஏற்படுத்தும் வகையில் உள் கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் கூடுதல் படுக்கைகள் கிடைக்கும். தற்போது கூடுதலாக 10 படுக்கை வசதிகள் தற்காலிகமாக ஏற்பாடு செய்துள்ளோம். கூடிய விரைவில் இப்பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்’ என்றார்.