ராஞ்சி, ஆக.2: ஜார்கண்ட் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 18 பாஜ எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எதிர்கட்சி எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் பதிலளிக்காததை கண்டித்து உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவை காவலர்கள் மூலம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் அவர்கள் சட்டமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறாமல் நள்ளிரவு வரை நுழைவு வாயில் அருகே தங்கி இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை அவை தொடங்குவதற்கு முன்பே கூச்சல் குழப்பம் நிலவி வந்தது. அவை தொடங்கியவுடன் பாஜ எம்எல்ஏக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர்.
முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் அவையில் சில ஆவணங்களை அவர்கள் கிழித்து எறிந்தனர். தொடர்ந்து அமளி நிலவியதால் சபாநாயபர் ரபிந்த்ரநாத் மாக்டோ பாஜ எம்எல்ஏக்கள் 18 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்த பின்னரும் அவர்கள் அவையில் இருந்து வெளியேறாததால் அவை காவலர்கள் மூலமாக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இன்று பிற்பகல் 2மணி வரைக்கும் 18 எம்எல்ஏக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.