Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜவ்வாதுமலையில் 24ம் ஆண்டு கோடை விழா கொண்டாட்டம் இன்றும், நாளையும் விமரிசையாக நடக்கிறது அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார் தேன் இளவரசி எனும் சிறப்புமிக்க

திருவண்ணாமலை, ஆக.30: தேன் இளவரசி எனும் சிறப்புமிக்க ஜவ்வாதுமலையில் 24ம் ஆண்டு கோடை விழா இன்றும் நாளையும் விமரிசையாக நடக்கிறது. விழாவை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோடை வாசஸ்தலங்களில் முக்கிய இடம் பெற்றது ஜவ்வாதுமலை. கிழக்கு தொடர்ச்சி மலையின் அங்கமாக திகழும் ஜவ்வாதுமலை, இயற்கை பேரில் நிறைந்த மலைப்பகுதியாகும். சந்தனம் மணக்கும் ஜவ்வாதுமலைக்கு, தேன் இளவரசி எனும் சிறப்பு பெயருண்டு. கொம்புத் தேன், மலைத் தேன், மர பொந்துத் தேன், பெட்டித் தேன், கொசுத் தேன் என அவை உருவாகும் தன்மையின் அடிப்படையில் பல்வேறு வகைகள் உண்டு. மலைப்பாறைகளின் கூட்டில் கிடைப்பவை மலைத் தேன். மரக்கிளைகளின் கூட்டில் கிடைப்பவை கொம்புத் தேன்.

அதன்படி, ‘தேன் இளவரசி’ என பெருமையுடன் அழைக்கப்படும் ஜவ்வாதுமலை பகுதியில் கொம்புத் தேன், மலைத் தேன் ஆகிய இரண்டும் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் தேனில் உள்ள சுவைப்போல, வேறு எங்கும் இருப்பதில்லை என்பது அதன் தனித்துவமாகும். கடல் மட்டத்தில் இருந்து 2300- 3000 அடி உயரத்தில் உள்ளது ஜவ்வாது மலை. ஒரு காலத்தில் சந்தனத்துக்கு புகழ் பெற்றதாக இருந்தது. மருத்துவத்துக்கு பயன்படும் அரியவகை மூலிகைகள் இங்கு ஏராளமாக உள்ளன. ஜவ்வாதுமலையின் அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியஸ் முதல் 26.0 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஆண்டு சராசரி மழையளவு 1,100 மிமீ.

இந்த பருவநிலைக்கு உகந்ததான சாமை, தினை, கேழ்வரகு, கொள்ளு, புளி, மா, கொய்யா, பலா, சீதாபழம், விளாம்பழம், லிச்சி, மிளகு போன்றவை இங்கு விளைகிறது. ஜவ்வாதுமலை பகுதியில் சிறு, சிறு குடியிருப்புகளாக 278 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் சுமார் 50 ஆயிரம் பழங்குடியின மக்களின் பிரதான வாழ்வாதாரம் மலை வளத்தை சார்ந்தே உள்ளன. இன்னும், பழமையும், பழங்குடியின பாரம்பரியமும் மாறாமல் பெரும்பாலானோர் வாழ்கின்றனர் என்பது தனிச்சிறப்பு. ஜவ்வாதுமலையில் கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த மலைப்பயணம் சுகமானது. ஜவ்வாதுமலையில் அமைந்துள்ள கோலப்பன் ஏரி படகு சவாரி, பீமன் நீர்வீழ்ச்சி, குழந்தைகள் பூங்கா, கண்ணாடி மாளிகை, நூற்றாண்டுகள் பழமையான நீர்மத்தி மரம் என எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கிறது.

இந்நிலையில், மலைவாழ் மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக அமையும் வகையில் ஆண்டுதோறும் ஜவ்வாதுமலையில் கோடை விழா நடத்தும் முயற்சி கடந்த 1996- 2001 திமுக ஆட்சி காலத்தில் ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக, 24வது ஆண்டு கோடை விழா இன்றும் நாளையும் ஜவ்வாது மலையில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஜவ்வாது மலைப்பகுதி ஜமுனாமரத்தூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு கோடை விழா தொடங்குகிறது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்குகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். டிஆர்ஓ ராமபிரதீபன் வரவேற்கிறார்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் வேலு கலந்து கொண்டு கோடை விழாவை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில், மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி, அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழாவை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கண்கவர் மலர் கண்காட்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், வீர விளையாட்டுக்கள், சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை, போளூர், ஆலங்காயம், அமிர்தி, செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது.