கீழ்வேளூர், ஜூலை 29: நாகப்பட்டினம் மாவட்டம், சோழவித்யாபுரத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் தாயான புனித சந்தன மாதா ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டு திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி இரவு நடைபெற்றது.
இதனையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் சம்மனசு, அந்தோணியார், சூசையப்பர், சுவக்கின், சந்தனமாதா ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக, வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. பின்னர், புனிதம் செய்ததை தொடர்ந்து சப்பரம் ஆலய வளாகத்திலிருந்து துவங்கி கண்கவர் வானவேடிக்கைகளுடன் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


