Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3 டன் மாம்பழம் பறிமுதல் செய்து அழிப்பு

திருப்பூர், மே 15: செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுக்களாக சென்று மாவட்டம் முழுவதும் மாம்பழம், தர்பூசணி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், குடோன்களில் ஆய்வு செய்தனர்.

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் தொடர்பாக 102 கடைகளில் ஆய்வு செய்து 12 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு முன்பாக திருப்பூரில் 2.5 டன் மாம்பழங்கள் அழிக்கப்பட்டன.

குளிர்பான கடைகள், ஐஸ்கிரீம் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. 35 கடைகளில் ஆய்வு செய்து, 5 கடைகளில் விதிமீறல் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டன. சுகாதாரமற்ற முறையில் பழச்சாறு தயாரித்த 5 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. பழச்சாறு, ஐஸ்கிரீம் தயாரிக்க நல்ல தண்ணீரை பயன்படுத்த வேண்டும். பழங்களை சுத்தமாகவும், நல்ல பழங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் தென்னம்பாளையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இது போன்ற மாம்பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எச்சரிக்கை விடுத்தனர்.