Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செம்பனார்கோயில் பகுதியில் வாழை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

செம்பனார்கோயில், ஜூலை 8: மா, பலா, வாழை போன்ற முக்கனிகளில் வாழையின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகும். வாழை இலை, தண்டு, பூ, வாழைக்காய், பழம் என அனைத்து பொருட்களையும் மனிதர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தொன்றுதொட்டு விவசாயிகள் வாழை சாகுபடியை செய்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே கீழையூர், கிடாரங்கொண்டான், பொன்செய், முடிகண்டநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பொன்செய் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக விவசாயிகள் வாழை நடவு செய்து, தொடர்ந்து சாகுபடி வயலை பராமரித்து வருகின்றனர்.

இதுகுறித்து வாழை சாகுபடி விவசாயி கூறியதாவது:வாழையை பயிரிடுவதன் மூலம் வாழை இலை, வாழைத் தண்டு, வாழைக்காய் அல்லது வாழைப் பழம் ஆகியவற்றின் மூலம் வருமானம் கிடைக்கிறது. வாழையை முறையாக பராமரித்தால் வாழையின் மூலம் அதிக லாபம் பெற முடியும். இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாழை நடவு செய்யப்பட்டது. இதற்காக புதுச்சேரியில் இருந்து வாழை சிறு கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்துள்ளோம். தற்போது சாகுபடி வயலை பராமரிப்பு செய்து வருகிறோம். அதன்படி வாழை பயிரிடும் விவசாயிகள் வாழையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மண்வெட்டியால் கொத்தி மண் அணைக்க வேண்டும். பக்கக் கன்றுகளை மாதம் ஒரு முறை நீக்க வேண்டும். இலைக்காக சாகுபடி செய்யப்படும் பூவன், கற்பூரவள்ளி மற்றும் மொந்தன் ரகங்களில் முதல் மூன்று அல்லது நான்கு பக்கக் கன்றுகளை வளர விடலாம்.

கடைசி பூ அல்லது சீப்பு வெளிவந்த ஒரு வாரத்தில் பூவை ஒடித்துவிட வேண்டும். பிறகு, 10 கிராம் யூரியா ஒடிக்கப்பட்ட பகுதியில் தொட்டுக் கொண்டிருக்கும்படி கட்டி விடலாம். இதனால் சத்துகள் அனைத்தும் காய்களுக்கு செல்வதால் வாழைக்காய்கள் விரைவில் முதிர்ச்சி அடையும். வாழையில் நீண்ட சதைப் பற்றுள்ள காய் மற்றும் காய்ப்பிடிப்பு தன்மையை அதிகரிக்க, பயிர் வளர்ச்சி ஊக்கி சைட்டோசைம் 180 மிலியை 180 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் வாழை மரங்களில் நடவு செய்த 90 மற்றும் 120வது நாட்களில் விசைத்தெளிப்பான் கொண்டு அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மட்டும் தெளிக்க வேண்டும்.

காற்றடிக்கும் நேரங்களில், மரங்கள் சாய்ந்து விடாமல் இருக்க திடமான கம்பு கொண்டு எதிர்புறமாக முட்டுக் கொடுக்க வேண்டும். காய்ந்த இலை மற்றும் நோய் தாக்கிய இலைகளை அவ்வப்போது அகற்றி எரிப்பதால் வாழை வயலை நோய், பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். வாழைக் கன்று நட்டு 12 முதல் 15 மாதங்கள் கழித்து அறுவடைக்குத் தயாராகிவிடும். மேலும் மண் மற்றும் இரகங்கள் பொறுத்து பூ பூத்த 90 முதல் 150 நாட்கள் கழித்து தார்களை அறுவடை செய்யலாம்.

இங்கு சாகுபடி செய்யப்படும் வாழை இலை, வாழை காய்கள், வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வெளியூர் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். நாங்கள் சாலையோரம் வைத்து சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறோம். பண்டிகை காலங்களில் வாழை இலை, வாழைப்பழம், வாழை காய்களுக்கு தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் கூடுதலாக விலைபோகும். இவ்வாறு அவர் கூறினார்.