Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மாவட்டத்தை சேர்ந்த 2,124 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூலை 24: சென்னை மாவட்டத்தை சேர்ந்த 2,124 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை மாவட்டத்தை சேர்ந்த 2,124 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், மாதவரம் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியில் நேற்று நடந்தது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 2,124 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘சென்னையில் வீட்டுமனை பட்டா கிடைக்காமல் அவதிக்குள்ளாகி கொண்டிருந்த மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாக, திமுக அரசு சார்பில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அவர்களுக்கு பட்டாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்னை இல்லாத சென்னையாக சென்னை இருக்க வேண்டும் என்று சிந்தித்து வருகிறார். தாத்தா, அப்பா வழியில் உதயநிதி ஸ்டாலின் எதிர்காலத்தின் அடித்தளமாக இருப்பார். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஸ்டாலின் என 3 முதலமைச்சர்களிடம் பணியாற்றி உள்ளேன், தம்பி உதயநிதி வேகமாக உழைத்து, எதிர்பார்க்கும் காரியங்களை முடிக்க நினைக்கிறார். மக்கள் இன்றைக்கு மனப்பூர்வமாக உதயநிதியை தலைவராக ஏற்றுக்கொள்கிறார்கள், மக்களை தன் பக்கம் ஈர்க்க கூடிய தலைவராக உதயநிதி இருக்கிறார்,’’ என்றார்.

பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நடுத்தர மக்களின் ஏற்றத்திற்காக தினம் தினம் பல திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. வீடு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு வீட்டிற்கான பட்டாவும் முக்கியம் என்பதால், அரசு விரைந்து வீட்டுமனை பட்டாக்களை வழங்கி வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது, சென்னையில் பட்டா கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் பட்டா வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தேன். தேர்தல் முடிந்த நிலையில், இப்போது விரைந்து வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. வீட்டிற்கான பட்டா என்பது ஒவ்வொருவருடைய உரிமை. சென்னையில் அடுத்த ஓரிரு நாட்களில் மொத்தம் 28,848 வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் இலவச பேருந்து பயணம் மூலம் இதுவரை 500 கோடி மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர், அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், மாவட்ட அவை தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், பகுதி செயலாளர்கள் துக்காராம், புழல் எம்.நாராயணன், தி.மு.தனியரசு, வை.ம.அருள்தாசன், ஏ.வி.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் புழல் சரவணன், கருணாகரன், தயாளன், மண்டல குழு தலைவர் நந்தகோபால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார், கவுன்சிலர்கள் புத்தகரம் ஏழுமலை, காசிநாதன், ராஜேந்திரன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.