விருதுநகர், மே 7: விருதுநகரில் 2 நாட்கள் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஒட்டுமொத்த கோப்பையை சென்னை பாக்சிங் அகாடமி வென்றது. விருதுநகர் ஹாஜி சிக்கந்தர் ஹவ்வா பீவி நடுநிலை பள்ளியில் மாநில அளவில் குத்துச்சண்டை போட்டிகள் இரண்டு நாட்களாக நடைபெற்றன. இதில், தமிழகத்தின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் 215 பேர் கலந்து கொண்டனர். 7 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
குத்துச்சண்டை போட்டியினை உபயோகிப்பாளர் உரிமை கமிட்டி மாவட்ட தலைவர் முஹம்மது எகியா தொடங்கி வைத்தார். நேற்று இரவு இறுதி போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் ஓவர் ஆல் டிராபி முதலிடத்தை சென்னை நாராயணன் பாக்ஸிங் அகாடமி பெற்றது. இரண்டாம் இடத்தை மயிலாடுதுறை கிங் பாக்ஸிங் கிளப்பும் மூன்றாவது இடத்தை விருதுநகர் மை ட்ரீம் பாக்சிங் கிளப்பும் வென்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகளை சாரா தங்க மாளிகை நிர்வாகி முகமது அபு குரைய்ரா மற்றும் சப்தகிரி அவார்டு நிர்வாகிகள் வழங்கினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விருதுநகர் சாரா தங்க மாளிகை மை ட்ரீம் பாக்சிங் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.