Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் ₹1 கோடியில் தமிழ்நாடு சுற்றுலா பயணச்சந்தை: பேரவையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

சென்னை, ஜூன் 27: தமிழ்நாடு சுற்றுலா பயணச் சந்தை ரூ.1 கோடி செலவில் சென்னையில் நடத்தப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததும், சுற்றுலா- கலை மற்றும் பண்பாடு துறை சார்பிலான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது:

 அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா தேவாலயப் பகுதி, சிவகங்கை மாவட்டம் பிரான்மலை பகுதி, திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி மற்றும் தெற்கு கள்ளிக்குளம் தேவாலய பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆகிய வழிகாட்டு சுற்றுலாத்தலங்களில் அடிப்படை வசதிகள் ரூ.8.10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புல்லாவெளி அருவி, கொட்டுவரை அருவி மற்றும் கோட்டை நங்காஞ்சியாறு அணைப் பகுதி, மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள குட்லாடம்பட்டி அருவி மற்றும் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலை அருவி ஆகிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

 கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரத்தில் உள்ள தொண்டி கடற்கரை, கன்னியாகுமாயில் சங்குதுறை, சொத்தவிளை கடற்கரை பகுதி, சூரிய காட்சிமுனை மற்றும் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அவதானப்பட்டி ஏரிப்பகுதி மேம்பாடு, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலையில் அமைந்துள்ள புங்கனூர் ஏரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தாமரைக்குளம் ஏரியில் படகு குழாம் மற்றும் இதர சுற்றுலா பணிகள் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

 நீலகிரி மாவட்டத்தில் உல்லாடாவில் கிராமியச் சுற்றுலாவை மேம்படுத்தல், கேத்தி மைனல்லா மற்றும் கோவை மாவட்டம வால்பாறை பகுதியில் காட்சிமுனை அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

 கோவையில் பல்வேறு மருத்துவ தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ சுற்றுலா மாநாடு ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.

 தமிழ்நாட்டில் நீர் சாகச விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பணிகளுக்கு ரூ.1 கோடி செலவிடப்படும்.

 தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் கடற்கரை மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள பழவேற்காடு ஏரிப்பகுதி ஆகியவற்றில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக சுற்றுலா பெருந்திட்டம் ரூ.1 கோடி செலவில் தயாரிக்கப்படும்.

 தமிழ்நாடு சுற்றுலா பயணச் சந்தை ரூ.1 கோடி செலவில் சென்னையில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.