செஞ்சி, மார்ச் 19: செஞ்சி அருகே கடைக்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காட்டு சித்தாமூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கீழ்பென்னாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6.1.2025 அன்று சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலையில் வீட்டுக்கு திரும்பியபோது கடைக்கு சென்றாராம். அப்போது அரசு பள்ளி அருகே நின்றிருந்த அதே ஊரை சேர்ந்த சரவணன் மகன் வினித்குமார் (23) என்பவர் திடீரென சிறுமி வாயில் துணியை அடைத்து பள்ளியின் கழிவறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதமாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பெற்றோர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வினித்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.