Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, மே 25: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசத்(கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்வி கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் -1ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்ப்புறங்களில் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், மற்றும் திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை இருக்க வேண்டும் (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்) திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டியில் அதிகபட்ச கடனாக ரூ.2 லட்சம், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டியில் அதிகபட்ச கடனாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 8 சதவீதத்தில் நபர் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மை மாணவ மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/முதுகலை தொழிற்கல்வி/தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம்-1ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டியிலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டியில் ரூ.30 லட்சம் வரை கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெற வேண்டும்.கடன் விண்ணப்பங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.

தனிநபர் கடன் திட்டம் சுய உதவி குழுக் கடன் விராசத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்): சிறுபான்மையினர் மத சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை.

வங்கிகள் கோரும் கல்விக்கடனுக்கான ஆவணங்கள்: சிறுபான்மையினர் மத சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, வாழ்விட சான்று. ஆதார் அட்டை நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது(அசல்), மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.