Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி தீவிரம்

மாமல்லபுரம், ஜூன் 6: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாவில், 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 7 தாலுகாவில் 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழைமானி என்பது ஒரு யூனிட் பகுதிக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் பெய்யும் மழையை அளவிடுவதற்கான ஒரு வானிலை கருவியாகும். இதனை, உடோமீட்டர் அல்லது ஓம்ப்ரோமீட்டர் என்றும் அழைக்கலாம். இதில் பதிவாகும் மழைநீரை பொறுத்து மழையளவு வெளியிடப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை மழையளவு கணக்கிடும் கருவியானது ஒவ்வொரு தாலுகாவிலும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இதனை, கணக்கிட்டு மழையளவு வெளியிடப்படும். இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையரகம் சார்பில், புதிதாக தானியங்கி மழைமானிகள், தானியங்கி வானிலை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, காட்டாங்கொளத்தூர், பாலூர், சிங்கபெருமாள் கோவில், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர், பையனூர், மானாம்பதி, செய்யூர், கொக்கரதங்கல், கூவத்தூர், பவுஞ்சூர், சித்தாமூர், ஜமீன் எண்டத்தூர், கருங்குழி, ஓணம்பாக்கம், கூவத்தூர், பெரும்பாக்கம், மாமண்டூர், காவாத்தூர், தாம்பரம், மேடவாக்கம், வேங்கை வாசல், மாம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா ஒன்று வீதம் மொத்தம் 25 தானியங்கி மழை மானிகள் அமைக்கும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாமல்லபுரம் பொதுப்பணித்துறை சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலக நுழைவு வாயிலுக்கு எதிரே ஒரு தானியங்கி மழைமானியை அமைக்கப்பட்டது. இன்னும், ஒரு சில இடங்களில் மட்டும் மழைமானிகள் அமைக்கப்படவில்லை. அப்பணியும், சில தினங்களில் முடிந்து விடும் என தனியார் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘தானியங்கி மழைமானி பொருத்தப்பட்டால் மழை விபரங்கள், வானிலை முன்னறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். வெப்பநிலை, குளிர் போன்ற தகவல்களும் கிடைக்கும்.

இந்த தானியங்கி மழைமானிகள் என்பது மழையளவு பதிவாவது நேரடியாக கணினியில் பதிவேற்றும் வகையில் மென்பொருள் மூலம் உருவாக்கப்படுவதாகும். இதில், நேரடியாக சென்று மழை அளவை கணக்கிட வேண்டியதில்லை. மழைமானிகள் வைக்கப்படும் இடத்தில் இருந்து மழையின் அளவை தானாக தெரிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல், தானியங்கி வானிலை மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இதில், காற்றின் வேகத்தை அறியும் வகையில் நவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக, இடம் தேர்வு செய்யப்படுகிறது. ஏற்கனவே, மேனுவல் மழைமானிகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே இதனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், பதிவாகும் மழையின் அளவை நேரடியாக வருவாய் நிர்வாக ஆணையரகமும், மாவட்ட கலெக்டர்களும் இருக்கும் இடத்தில் இருந்தே கணினி மூலம் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

ஆர்ஐ அலுவலகத்தில் மழைமானி அமைப்பு

மதுராந்தகம்: தமிழ்நாட்டில் பெய்யும் பருவமழை, புயல் மழை, கோடை மழையின் அளவுகளை பதிவு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றில் மழைமானி அமைத்து பதிவு செய்து வருகின்றனர். தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக ஒரே மாவட்டத்தில் சீராக மழை பெய்வது இல்லை. மாவட்டத்தின் ஒரு பகுதியில் கனமழையாகவும், மறு பகுதியில் மழை இன்றியும் காணப்படுகிறது. இதன் காரணமாக தாலுகா அளவில் புதிதாக பல இடங்களில் மழைமானிகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகாவில் உள்ள பவுஞ்சூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே மழையின் அளவை துல்லியமாக தானியங்கி முறையில் பதிவு செய்யும் வகையில் சோலார் வசதியுடன் கூடிய வானிலை மழைமானி அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த மழைமானியை தாலுகா மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இருந்தபடியே மழையின் அளவை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.