Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுத்தம் செய்யாத தொட்டியில் இருந்து விநியோகம் செய்த குடிநீர் அருந்திய 12 போர் பாதிப்பு

விராலிமலை, ஜூலை 12: அன்னவாசல் அருகே நீண்ட நாட்கள் சுத்தம் செய்யாமல் இருந்த குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்படும் நீரை அருந்திய மக்கள் சிலருக்கு உடல் நிலை உபாதைகள், சிலருக்கு மஞ்சள் காமாலை அறிகுறி இருந்த நிலையில் மருத்துவதுறையினர் இரண்டாவது நாள் அப்பகுதியில் முகாம் அமைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் 12 பேர் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் 11 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அன்னவாசல் அருகே வயலோகம் ஊராட்சியில் உள்ளது கீழத்தெரு இங்கு நூற்றுக்கணக்கானோர் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் நீர் தேவையை போக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தண்ணீர் வரவுக்கு தகுந்தார் போல் காவிரி நீர், மற்றும் தொட்டியின் அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்த்துளை கிணறு மூலம் தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.இந்த நிலையில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட அந்த தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தொட்டியின் அடியில் தேங்கி நிற்பதாகவும், அந்த கழிவு நீர் ஆழ்துளை கிணற்றுக்குள் இறங்கி கிணற்று நீரில் கலந்து வருவதாகவும் அந்த நீர் மேல் நிலை நீர் தேக்க தொட்டியில் தற்போது ஏற்றப்பட்டு விநியோகித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நீரை அருந்திய அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் சிலருக்கு உடல் நிலை உபாதை ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை 12 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி பேதி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு சோர்வடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக மாவட்ட மருத்துவ துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய மாவட்ட மருத்துவ துறை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள் என பத்துக்கும் மேற்பட்டோரை வயலோகம் வரவழைக்கப்பட்டு மருத்து முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது உறவினர் பாதிக்கப்பட்டவர்களை புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இதை தொடர்ந்து 11 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீரை அருந்திய யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் மருத்துதுறை சார்பில் வியாழக்கிழமை தொடக்கப்பள்ளியில் முகாம் அமைத்து மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும், அலுவலர்கள் வீடு வீடாக சென்று குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, அதில் யாரேனுக்கும் உடல் உபாதை உள்ளதா என கேட்டறிந்தனர். இரண்டு நாட்களாக அங்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை 45 பேர்களிடம் ரத்த மாதிரி சேமிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு அப்பகுதி கிராமங்களில் மருத்துவ முகாம் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக மருத்துவதுறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.