சிவகங்கை, ஜூலை 7: சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் இரண்டாவது வாரம் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வருகிற 9.7.2025 முதல் 15.7.2025 வரை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக பல்வேறு தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
9.7.2025 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல், திறன் பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி, 10.7.2025 அன்று மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 11.7.2025 அன்று பொறியியல் பயிலும் மாணவ,மாணவியருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி 14.7.2025 அன்று பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியும், 15.7.2025 அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இந்த தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04575-240435 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை அறிந்து கொண்டு பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


