கோவை, நவ. 5: தமிழக அரசு தொற்றா நோயாளிகளுக்கு ஏற்பட கூடிய சிக்கல்களை கருத்தில் கொண்டு சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் சிறுநீரகம் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் துணை ஆரம்ப நிலையத்தில் சிறுநீரக பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில், பாதிப்பு கண்டறியப்படும் நபர்களுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 891 பேரும், துணை சுகாதார நிலையங்கள் மூலம் 25 ஆயிரத்து 341 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 232 பேர் பயன் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


