Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாமியாருடன் சுற்றித்திரிந்த பெண் கழுத்தறுத்து படுகொலை * ஏரியில் சடலம் வீச்சு * எஸ்பி நேரில் விசாரணை கண்ணமங்கலம் அருகே பயங்கரம்

கண்ணமங்கலம், செப்.20: கண்ணமங்கலம் அருகே சாமியாருடன் சுற்றித்திரிந்த சென்னை பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அவரது சடலத்தை ஏரியில் மீட்ட நிலையில் இதுகுறித்து எஸ்பி பிரபாகர் நேரில் விசாரணை நடத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆங்காங்கே குட்டைகளில் தண்ணீர் தேங்கியும், புதர்கள் மண்டியும் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடு மற்றும் மாடுகளை ஏரியில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள புதர் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, திருவண்ணாமலையில் இருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலீசார் துப்புத்துலக்கினர். அப்போது, சிறிது தூரம் ஓடி சென்ற நாய், பின்னர் நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையில், தகவலறிந்த திருவண்ணாமலை எஸ்பி பிரபாகர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர், கொளத்தூர் மற்றும் கண்ணமங்கலம் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில், கொலையான பெண்ணிடம் சென்னை ஆவடியில் இருந்து பூந்தமல்லி வந்ததற்கான பஸ் டிக்கெட் இருந்தது. அவர் அணிந்திருந்த கண்ணாடி சுங்குவார் சத்திரத்தில் வாங்கியது என அந்த கண்ணாடி கவரின் மூலம் இது தெரியவந்தது.

இவற்றை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கண்ணாடி கடைக்காரரை தொடர்பு கொண்டதில் கொலையான பெண் பெரும்புதுரை சேர்ந்த அலுமேலு(50) என கண்டறிந்தனர். அலமேலு பவுர்ணமி நாள் முதல் கடந்த 2 நாட்களாக கண்ணமங்கலம், புதுப்பேட்டை, கொளத்தூர் பகுதிகளில் ஒரு சாமியாருடன் சுற்றித்திரிந்து வந்ததாகவும், நேற்று முன்தினம் மாலை ஏரிக்கரை அருகே அவர்கள் இருவரையும் பார்த்ததாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, கொலை செய்யப்பட்ட அலமேலுவுடன் இருந்த சாமியார் யார்? எதற்காக இருவரும் இங்கு வந்தார்கள்? சாமியார் தான் பெண்ணை கொலை செய்தாரா? அவர் கொலைக்கான காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். சாமியாருடன் சுற்றித்திரிந்த பெண் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.