சாத்தூர், டிச.9: சாத்தூர் அருகே சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே குண்டலகுத்தூரில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக, கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை தண்ணீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது பயன்பாட்டில் இருந்து வரும், இந்த மேல்நிலை நீர்த்தொட்டி முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்து காணப்படுகிறது.
தண்ணீர் தொட்டியை தாங்கி நிற்கும் நான்கு தூண்களும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் தொட்டி இடிந்து விழுந்து விபத்து அபாயம் உள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகையால், சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி, விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


