கெங்கவல்லி, ஏப்.22: கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மனைவி சந்திரா(67). ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். நேற்று முன்தினம், இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இரவு அங்கேயே தங்கி விட்டு, நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது, மேற்கூரை பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், கெங்கவல்லி எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். மேலும், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் நேரில் விசாரித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். பூட்டிய வீட்டுக்குள் ஓட்டை பிரித்து இறங்கி பீரோவை உடைத்து 5 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+
Advertisement


