Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோவை பாஸ்ட்புட் வணிகர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மயோனைஸ் பயன்படுத்தக்கூடாது

கோவை, ஜூன் 5: கோவை மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் துரித உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் சாண்ட்விட்ச், சவர்மா, பர்கர், பிரெட், சிக்கன், ஆம்லெட் உள்ளிட்டவைக்கு மயோனைஸ் அளிக்கின்றனர். இந்நிலையில், பச்சை முட்டையை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிக்க தமிழ்நாடு அரசு ஓராண்டிற்கு தடை விதித்துள்ளது. இது கடந்த மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மாநகராட்சி பகுதி சேர்ந்த பாஸ்ட்புட் உணவக உரிமையாளர்களுக்கு அரசால் தடை செய்யப்பட்ட மயோனைஸ் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில், உரிமையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில், பச்சை முட்டை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும், வேக வைத்த முட்டையின் வெள்ளை பகுதியை பயன்படுத்தி கொள்ளலாம். தயாரித்த மயோனைஸ் அன்றைய தினமே பயன்படுத்த வேண்டும். மறுநாள் பயன்படுத்த கூடாது. மேலும் சவர்மாவில் பூச்சிகள், தூசி செல்லாத வகையில் பாதுகாக்க வேண்டும்.

நன்றாக வே வைக்கப்படாத சவர்மா விற்பனை செய்ய கூடாது என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். கடைகளுக்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வின் போது உரிமம் இல்லை என தெரியவந்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றனர். தொடர்ந்து, சிறப்பு முகாம் நடத்தி உரிமம், பதிவு சான்று, புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், துரித உணவக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் 100 பேர் பங்கேற்றனர். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ் இரண்டு வருடம் செலுப்படியாகும். இவர்களுக்கு பாதுகாப்பாக எப்படி உணவு சமைப்பது, சமைத்த உணவை எந்த வெப்பநிலையில் அளவில் பாதுகாக்க வேண்டும். உணவு கையாளும் நபர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், உணவு பொருட்களில் நிறமி பயன்படுத்த கூடாது எனவும், தரமான உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள பாஸ்ட்புட் வணிகர்களுக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.