Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோவை அரசு மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா 234 பேர் டாக்டர் பட்டம் பெற்றனர்

கோவை, ஜூன். 9:கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியின், 2018ம் ஆண்டு பேட்ஜுக்கான பட்டமளிப்பு விழா நேற்று கோவை அரசு மருத்துவ கல்லுரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 146 பேருக்கும், இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரி மாணவர்கள் 88 பேருக்கும் என மொத்தம் 234 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நிர்மலா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லுரியின் 37 வது பட்டமளிப்பு விழாவும், கோவை இ.எஸ்.ஐ., அரசு மருத்துவக் கல்லுரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவும் ஒருங்கிணைந்து நடைபெற்றது.

மருத்துவத் துறையின் வரலாற்றில் மட்டுமல்ல வேறு எந்த கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிலும் இரு கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா ஒரே அரங்கத்தில் நடைபெற்றது இல்லை. கடந்த 3 மாத காலத்தில் இத்துறை சார்பில் எந்த பணியையும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக செய்ய இயலவில்லை. நேற்று முன்தினம் தேர்தல் நடத்தை விதிமுறை முடிவுக்கு வந்ததால் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். மருத்துவ துறை வரலாற்றில் தமிழகத்தில் ஒரு புதிய மைல் கல்லாக பல்வேறு திட்டம் துவங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, இதயம் காப்போம், மக்களை தேடி மருத்துவ திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இத்தகைய திட்டங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒன்று. 2021ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.

திட்டத்தை துவங்கி வைத்த போது அவர் கூறியது, முதல் பயனாளிக்கு இன்றைக்கு மருந்து பெட்டகத்தை தருகிறோம், இது விரைவில் ஒரு கோடி பயனாளர்களை அடைகிற வகையில் இந்த திட்டம் பயனுக்கு வர வேண்டும் என்று சொன்னார். அந்த வகையில் ஒரு கோடியே 1-வது பயனாளிக்கு திருச்சியில் உள்ள சன்னாசிப்பட்டி பகுதியில் மருந்து பெட்டகம் தரப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பல உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது. அதற்காக அரசு இதுவரை செலவிட்டிருக்கிற தொகை, 221 கோடியே 11 லட்சம் ரூபாய். அந்த வகையில் அந்த திட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு மிகச்சிறந்த திட்டமாக இருந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மலுமிச்சம்பட்டியில் இதயம் காப்போம் திட்டம் துவங்கப்பட்டது. இதன் வாயிலாக மாரடைப்பு உயிரிழப்பு குறைந்துள்ளன.

துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் லோடிங் டோஸ் வாயிலாக, 8411 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக இலவசமாக செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் துவங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் குழந்தை இல்லாத தாய்மார்கள் குழந்தை பேறு கிடைக்கும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால், 1021 மருத்துவர்கள் தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் கலந்தாய்வு வாயிலாக மாவட்டங்களை தேர்வு செய்யலாம். முதல்வர் வழிகாட்டுதலோடு, 2553 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்காக எம்.ஆர்.பி., வாயிலாக விண்ணப்பிக்க, கால அவகாசம் ஜூலை, 15 வரை இருக்கிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைப்பது என்பது கடினம்.

உங்களுடைய தகுதி, திறமை பொறுத்து வெளிப்படையாக அந்த பணியிடங்கள் நிரப்பப்படும். இதில் ஒளிவு மறைவு கிடையாது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், கோவை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியின் முதல்வர் ரவீந்திரன், கோவை மாநகர், மாவட்ட செயலாளர் கார்த்திக், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி மற்றும் கல்லூரி துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.