கோவை, ஏப். 5: கோவை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பெய்த பலத்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவியது. கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தவிர, நேற்று முன்தினம் மாநகரில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இதனை தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக மழை பெய்தது.
உக்கடம், குனியமுத்தூர், பீளமேடு, ராமநாதபுரம், வடகோவை, கவுண்டம்பாளையம், கணபதி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் நேற்று மாலையில் பெய்ய துவங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி மேற்கு மண்டலம் 17வது வார்டு முருகன் நகர் பகுதியில் மழையின் காரணமாக சாலையில் மரம் விழுந்தது.
இந்த மரத்தை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.