Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோவளத்தில் பேருந்து நிலையம் இல்லாததால் சாலையோரம் நிறுத்தப்படும் பேருந்துகள்

திருப்போரூர், ஜூன் 17: சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் செல்லும் வழியில் கோவளம் உள்ளது. கோவளத்தில் அழகிய வளைவான கடற்கரை, பிரபல கார்மேல் மாதா தேவாலயம், கைலாச நாதர் கோயில், இஸ்லாமிய தர்கா ஆகியவை உள்ளது. இதன் காரணமாக அனைத்து மத மக்களும், சுற்றுலாப் பயணிகளும் தினசரி கோவளத்திற்கு வந்து செல்கின்றனர். கோவளத்திற்கு சென்னை கோயம்பேடு, உயர்நீதிமன்றம், தாம்பரம், அடையாறு, தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவளத்தில் பேருந்து நிலையம் இல்லாததால் மாநகரப் பேருந்துகள் அனைத்தும் கோவளம் தர்கா அருகே நான்கு முனை சந்திப்பில் சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன.

ஏற்கனவே, கோவளம் பஜார் வீதி, தர்கா தெரு, மாமல்லபுரம் சாலை, கடற்கரை சாலை போன்ற இடங்களில் ஏராளமான கடைகளும், அதிக மக்கள் நடமாட்டமும் இருப்பதால் வாகன நெரிசல் உள்ளது. பேருந்து நிலையம் இல்லாததால் பேருந்துகள் இந்த நான்கு சாலைகளின் ஓரங்களிலும் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், எந்த ேபருந்து எந்த இடத்தில் நிற்கிறது என்று கண்டு பிடிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் தங்களின் குழந்தைகளை தூக்கிக் கொண்டும், பைகளை தூக்கிக் கொண்டும் சாலைகளில் அங்கும் இங்கும் ஓடுவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கோவளம் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், வருவாய்த்துறை சார்பில் அரசு புறம்போக்கு இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்காததால் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே, சுற்றுலா நகரமான கோவளத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க கிழக்கு கடற்கரை சாலையையொட்டி அரசு புறம்போக்கு இடத்தை தேர்வு செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும், நவீன முறையில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை அமைக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோவளம் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் அச்சம்

கோவளம் நான்கு முனை சந்திப்பு ஒட்டியே பேருந்துகளை நிறுத்துவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது, கேவளம் கடற்கரைக்கு வாகனத்தில் வருவோர், போக்குவரத்து நெரிசலில் சிக்குன்றனர். மேலும், பொதுமக்கள் சாலை ஓரத்தில் நடந்து செல்ல முடியாமலும், ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்தில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்கி சாலையை கடக்க முடியாத நிலை உள்ள. மேலும், கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் குழந்தைகளை சாலையில் அழைத்து செல்ல முடியாமல் குழந்தைகள் மீது வாகனங்கள் மோதி விடுமே என்ற அச்சத்துடன் செல்கின்றனர். வாகன நெரிசல், பாதசாரிகள் நடக்க முடியா நிலை என பல்வேறு வகையான இன்னல்களுக்கு அப்பகுதி சந்தித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.