கோவை, மே 8: கோவை மாவட்ட சிறப்பு திட்டங்கள் கோட்டத்தின் கீழ் அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை நடைபெற்று வரும் உயர் மட்ட சாலை பணிகளை கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.சரவணன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உள் தணிக்கை குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. கோவை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் பணியின் முன்னேற்றம் குறித்து உள் தணிக்கை குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பாலப்பணி தற்போது 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த உயர்மட்ட சாலையில் ஏறுதளம், இறங்குதளம் அமைக்கப்பட்ட வேண்டிய 8 இடங்களில் 7 இடங்களில் தற்போது பணி நடைபெற்று வருகிறது. இதற்கான நில ஆர்ஜித பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நில உடமைதாரர்களுக்கு இழப்பீட்டு வழங்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 2024க்குள் பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்பு வேலை நடைபெறும் அவிநாசி சாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உப்பிலிபாளையத்தில் அமைக்கப்பட்டு வரும் சாய்வு தளத்தின் அளவுகள் சரிபார்க்கப்பட்டது.
விமான நிலைய இறங்குதள தூண்களில் அதிநவீன கருவிகளை கொண்டு திறன் அறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன்பின், இறங்கு தளத்திற்காக அமைக்கப்பட்டு வரும் ரெயின் போர்ஸ்ட் எர்த் வால் அளவுகள் சரிபார்க்கப்பட்டன. பின்பு தென்னம்பாளையத்தில் ஓடுதளத்தின் பகுதிகளை தயாரிக்கும் களத்திற்குச் சென்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் திருப்பூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டப்பொறியாளர் ஜே.கே ரமேஷ் கண்ணா, சிறப்பு திட்ட கோட்ட பொறியாளர் வை.சமுத்திரக்கனி, உதவிக்கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.