Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலை பல்கலையில் முற்றுகை ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், மே 29:அண்ணாமலை பல்கலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் 103 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் 600க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இதில் பணி நிரவல் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பல்கலைக்கழகத்தில் 491 தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வருடாந்திர ஊதிய உயர்வை 1.4.2025 முதல் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை 1.4.2025 முதல் அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர், ஒருங்கிணைப்பு குழு கமிட்டி உறுப்பினர் அருட்செல்வி, பதிவாளர் பிரகாஷ் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து கோரிக்கைகளை அமல்படுத்தவில்லை என்றால், 27ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்த போவதாக தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் அருகே 100க்கும் மேற்பட்ட தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் திரண்டு வந்து, பதிவாளர் பிரகாஷை சந்தித்து நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.  இதற்கு எந்த ஒரு முடிவும் எட்டாத நிலையில், பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நிர்வாக அலுவலகம் முன் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பல்கலைக்கழக பதிவாளர்களை கண்டித்து, 20 பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தமிழரசி மற்றும் ஏராளமான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படாததால் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் 103 பேரை போலீசார் கைது செய்து, 2 பேருந்துகளில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, பின்னர் மாலை விடுவித்தனர். இச்சம்பவத்தால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.