சாயல்குடி, மே 17: கடலாடி வனப்பேச்சியம்மன் கோயில், வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. கடலாடி சமத்துவபுரம் அருகே உள்ள கொண்டையுடைய அய்யனார், வனப்பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் கோயில் 15ம் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. கடலாடி-முதுகுளத்தூர் சாலையில் நடைபெற்ற பெரியமாடு வண்டி போட்டியில் 7 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடுகள் முதலிடத்தையும், நெல்லை மாவட்டம், வேலாங்குளம் கண்ணனின் மாடுகள் 2ம் இடமும், மதுரை பரவை சின்னவேலம்மாள் மாடுகள் 3ம் இடத்தையும், எம்.கரிசல்குளம் கருப்புத்துரை மாடுகள் 4ம் இடத்தையும் பெற்றன. சின்ன மாடுகள் பிரிவில் 10 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.
இதில் கே.வேப்பங்குளம் அரிராம் நாகஜோதி மாடுகள் முதல் இடத்தையும், எம்.கரிசல்குளம் வர்ணிகாநாச்சியார் மாடுகள் 2ம் இடத்தையும், மேல்மருதூர் முத்துப்பாண்டி மற்றும் ஜகவீரபுரம் முத்துமீனாள் மாடுகள் 3ம் இடத்தையும், மதுரை வெள்ளரிப்பட்டி பாலா மாடுகள் 4ம் இடத்தையும் பெற்றன. பூஞ்சிட்டு பந்தயத்தில் 17 வண்டிகள் பங்கேற்றதால் அதனை பிரித்து 3 உள்பிரிவு போட்டிகளாக நடத்தப்பட்டது. மூன்று பிரிவு போட்டிகளிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசாக பணமும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. போட்டியில் மதுரை, சிவகங்கை நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பந்தய மாடுகள், வீரர்கள், பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.