Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் 1200 தூய்மைப்பணியாளர்கள் களப்பணி * 260 டன் குப்பை கழிவுகள் அகற்றம் * கலெக்டர் நேரில் ஆய்வு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்

திருவண்ணாமலை, மே 14: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் முடிவடைந்த நிலையில், 14 கிமீ தூரமுள்ள கிரிவலப்பாதையை சுட்டெரித்த கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் 1200 தூய்மைப்பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டனர். ஒரே நாளில் 260 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் கடந்த 11ம் தேதி இரவு 8.47 மணிக்கு தொடங்கி, நேற்று முன்தினம் இரவு 10.43 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, இரண்டு நாட்களும் திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளித்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை நாளில் சித்ரா பவுர்ணமி அமைந்ததால், பக்தர்கள் வருகை இதுவரை எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்தது.

இந்நிலையில், கிரிவலம் பக்தர்கள் கிரிவலப்பாதையை தூய்மையாக வைத்திருந்த ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது. அதோடு, மக்கும் தன்மையில்லாத, சுற்றுச்சூழலுக்கு கேடுதரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், கிரிவலப்பாதையில் குப்பை கழிவுகளும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் என டன் கணக்கில் கடந்த இரண்டு நாட்களில் குவிந்தன. மேலும், அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் பாக்குமட்டை தட்டுகள், இலைகள், குடிநீர் பாட்டில்கள், காகித டம்ளர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தன. இந்நிலையில், இரண்டு நாட்கள் கிரிவலம் முடிந்த நிலையில், திருவண்ணாமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 1200 தூய்மைப்பணியாளர்கள், கிரிவலப்பாதை தூய்மைப்பணியில் நேற்று முழு வீச்சில் ஈடுபட்டனர். அகற்றப்பட்ட குப்பை கழிவுகள் டிராக்டர்கள், மினி லாரிகளில் குப்பை கிடங்குக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

அக்னி நட்சத்திர வெயில் காலமான நேற்று 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்தது. அனல் காற்றும் வீசியது. சாலைகளில் நடந்து செல்ல முடியாதபடி கானல் நீர் காட்சிகள் காணப்பட்டன. ஆனாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தூய்மைப்பணியாளர்கள் முழு வீச்சில் களப்பணியில் ஈடுபட்டு கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள், மாட வீதி உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தினர். இந்நிலையில், கிரிவலப்பாதையில் நடந்த தூய்மைப்பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். மேலும், தூய்மைப்பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். ஆய்வின்போது, டிஆர்ஓ ராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.