Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி மிருகண்டா அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கலசபாக்கம், துரிஞ்சாபுரம் பகுதிகளில்

கலசபாக்கம், மே 9: கலசபாக்கம், துரிஞ்சாபுரம் பகுதிகளில் பல இடங்களில் நேற்று அதிகாலை முதல் கோடை மழை கொட்டி தீர்த்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மிருகண்டா அணையில் பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கோடை வெயில் கடந்த 2 மாதங்களாகவே சுட்டெரிக்கிறது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய அன்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் பரவலாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் நெற்பயிர்கள் சாய்ந்தன.

இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் கலசபாக்கம் தாலுகாவில் கலசபாக்கம், அணியாலை, மட்ட வெட்டு, பட்டியந்தல், சோழவரம், மேலாரணி, வில்வாரணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் மழை பெய்ததால் விவசாயிகள் மனம் குளிர்ந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கலசபாக்கம் பகுதியில் நெல் அறுவடை செய்த விவசாயிகள் நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியாததால் பாதுகாப்பற்ற முறையில் நெல் மூட்டைகளை தங்கள் வீடுகளில் அருகாமையில் திறந்தவெளியில் மூட்டை மூட்டையாக வைத்திருந்தனர். பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி பகுதியில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது வேதனைக்குள்ளாக்கியது.

மேலும் கலசபாக்கம் பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையின் மொத்த கொள்ளளவு 22.97 அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 8 அடியாக உள்ள நிலையில், தொடர்ந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து கோடை மழை நீடித்தால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. துரிஞ்சாபுரம் ஒன்றியம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்த மழையால் தென்னை மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி கலசப்பாக்கம் வட்டத்தில் 27 மி.மீ மழை பதிவானது. நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் தொடங்கிய மழை நேற்று காலை 7 மணி வரை கோடை மழை கொட்டி தீர்த்தது. கோடை வெப்பத்தின் தாக்கத்தால் தவித்த பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த மழை சற்று குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.