பழநி, பிப். 27: பழநி மேற்கு பகுதி கிராமங்களான ஆண்டிபட்டி, குதிரையாறு, காவல்பட்டி பெருமாள்புதூர், பெரியம்மாபட்டி பகுதிகளில் தென்னந்தடுப்பு தயாரிப்பு முக்கிய குடிசை தொழிலாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தென்னந்தடுக்குகள், தமிழகத்தின் வெப்பமான பகுதிகளில் வீட்டின் மேற்கூரை அமைக்கவும், குடிசை அமைக்கவும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், காய்கறிகள் சாகுபடிக்கு பட்டறை அமைக்கவும் பயன்படுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் கொளுத்தும் கோடை வெயிலால் தென்னந்தடுக்குகளின் தேவை அதிகரித்து அதன் விலையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து காவலப்பட்டியை சேர்ந்த பத்மா கூறியதாவது: கோடை வெயிலின் காரணமாக அதிக வெப்பம் நிலவும் தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், பெரம்பலூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்னந்தடுக்குகள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் கோழி பண்ணைகளுக்கும் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தரத்தின் அடிப்படையில் ஆயிரம் தடுக்குகள் ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தரத்தை பொறுத்து ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினார்.