Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொளஞ்சியப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

விருத்தாசலம், மார்ச் 25: விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இந்தாண்டு 10 நாள் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சுவாமிகளுக்கு காலை மாலை என இருவேளையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான மாசி மக திருவிழா நேற்று நடந்தது.

இதைமுன்னிட்டு, அதிகாலை கோயிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரை தீர்த்த மண்டபத்தில் எழுந்தருள அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கொளஞ்சியப்பர் அருள்பாலிக்க வடக்கு கோட்டை வீதி, கிழக்கு கோட்டை வீதி, தென்கோட்டை வீதி, மேலக்கோட்டை வீதி வழியாக மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்தார்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மணிமுத்தாற்றில் இருந்து அலகிட்டு கொண்டும், பல்வேறு காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கொளஞ்சியப்பர் கோயிலுக்கு சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து மாலையில் கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். மேலும் விருத்தாசலம் சேலம் சாலை, கடலூர் சாலை, ஜங்ஷன் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கினர்.

மேலும் விருத்தாசலம்-மணவாளநல்லூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேருந்துகளை மாற்று பாதையில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து பங்குனி உத்திர திருவிழா நடந்தது.