கை, கால்கள் கட்டிய நிலையில் விவசாய கூலி தொழிலாளி சடலம் மீட்பு அடித்து கொலையா? போலீசார் விசாரணை தண்டராம்பட்டு அருகே கிணற்றில்
தண்டராம்பட்டு, ஜன. 24: தண்டராம்பட்டு அருகே கிணற்றில் கை, கால்கள் கட்டிய நிலையில் விவசாய கூலி தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ரவி(43). விவசாய கூலி. இவர் கடந்த 19ம் தேதி இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது மறுநாள் காலையில் அவரது மனைவி சாந்தி எழுந்து பார்த்தபோது ரவி காணவில்லை. உடனடியாக அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சாந்தி தச்சம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சடலம் மிதப்பதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து தச்சம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் கை, கால்களை கயிறு கட்டி மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கிணற்றில் சடலம் ஒன்று மிதந்துகொண்டிருந்தது குறித்து தகவல் அறிந்து சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் விரைந்து வந்து சடலத்தை பார்த்து காணாமல் போன ரவி சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.
அப்போது மனைவி சாந்தி கூறுகையில், ‘ரவி கடந்த 20ம் தேதி முதல் காணவில்லை. நாங்கள் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் இடம் கேட்டு தேடி வந்த நிலையில் ரவியை மர்ம நபர்கள் கை கால் பகுதியை கயிறு கட்டி கிணற்றில் கொலை செய்து வீசி இருக்கலாம் என கூறினர். இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை அடித்து கொலை செய்து கை, கால்களை கட்டி கிணற்றில் வீசினார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


