திருச்சி, மே 20: கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சியில் கடந்த ஏப்.24ம் தேதி பாலக்கரை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட எடத்தெரு அண்ணா சிலை அருகில் நடந்து சென்ற கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். புகாரின்போில் மேற்கொண்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட பாலக்கரை கீழபுதூரை சோ்ந்த ரவுடி விஜய்பாபு (26) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து ரவுடி விஜய்பாபு குறித்து போலீசார் நடத்திய மேல் விசாரணையில், விஜய்பாபு மீது 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தொியவந்தது. எனவே ரவுடி விஜய்பாபுவின் தொடா் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் பாலக்கரை இன்ஸ்பெக்டர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையை ஆய்வு செய்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, விஜய்பாபுவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் விஜய்பாபு மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அதற்கான ஆணையை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விஜய்பாபுவிடம் சார்வு செய்தனர்.