Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் தொழில்நுட்ப முறைகளை கையாள வேண்டும்

மயிலாடுதுறை, மே 19: குறுவை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான தொழில்நுட்ப முறைகள் குறித்து செம்பனார்கோயில் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தெரிவித்ததாவது:

பொதுவாகவே அனைத்து விவசாயிகளும்ஒவ்வொரு வருடமும் தங்களுடைய சாகுபடி வயல்களின் தன்மையை மண் ஆய்வு மற்றும் நீரின் பரிசோதனை மூலம் நிலத்தின் தன்மையையும் நிலத்தடி நநீரின் தற்போதைய நிலையினை தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக களர் மற்றும் உவர் நிலங்களில் அவசியம் மண் மற்றும் நீரை பரிசோதனை செய்து மண்ணை சீர் திருத்துவதன் மூலம் கார அமிலத்தன்மையை நடுநிலையாக்கலாம். களர் மற்றும் உவர் தன்மையை தாங்கி வளரும் நெல் ரகங்களான தேர்வு செய்து பயிர் செய்ய வேண்டும். குறிப்பாக தற்போது பரவலாக புவி வெப்பம் அதிகமாக இருப்பதினாலும் தற்போது சாகுபடி செய்துள்ள குறுவை நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் அடியுரமாக பாஸ்பேட் உரங்களான டிஏபி, கலப்பு உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் அதிகம் பயன்படுத்துவதால் பாசி மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாகி நாற்றுக்கள் கருகிவிடும் நிலை ஏற்படும்.

இதற்கு பதிலாக பாஸ்பேட் உரங்களின் பயன்பாட்டை குறைக்க பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் இடுதல் அவசியமாகும் பொதுவாக நடவுக்கு முன்னர் பசுந்தாள் பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு மற்றும் கொழிஞ்சி பயிரிட்டு 45 நாட்கள் கழித்து நிலத்தில் மடக்கி உழுதல் உடன் பசுந்தழை பயிர்களையும் இட்டு உழவு செய்தல் வேண்டும் அவ்வாறு செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறையாமலும் நிலத்தின் தன்மை குறையாமலும் பாதுகாக்க இயலும் நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் நன்கு வடிகால் வசதிகளை ஏற்படுத்தி வைத்தல் அவசியம் ஆகும். புழுதி உழவு செய்யும்பொழுது ஒரு ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் இட்டு 24 மணி நேரம் நீரை நிறுத்தி பின்னர் வடிகட்டுதல் மூலம் மண்ணில் உள்ள உப்பின் அளவை குறைப்பதோடு பாசிகளினால் ஏற்பட்ட மண் காற்றோட்டம் தடுப்பை சரி செய்கிறது. தொழு உரம் ஏக்கருக்கு குறைந்தது 5 டன் அடியுரமாக இடுதல் வேண்டும். பாசியால் பாதிக்கப்பட்ட வயல்களில் பயிர்களின் வளர்ச்சி குறைவாக இருக்கும் பட்சத்தில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை 25 சதவீதம் கூடுதலாக இட வேண்டும். மேலும் பொட்டாஷ் உரத்தை ஏக்கருக்கு 30 - 35 கிலோ என்ற அளவில் இடவேண்டும். நாற்றங்கால் மற்றும் வயல்களில் அதிகபடியான நீர் தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் வயல் நீர் குழாய் அமைத்து நீரை சிக்கனமாக கடைபிடித்தல் அவசியமாகும். பாசி அதிகம் படர்ந்துள்ள வயல்களில் கோனோவீடர், ரோட்டரி வீடர் மற்றும் பவர் வீடர் போன்ற களை எடுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி களையுடன் நிலத்தில் மடக்கி உழ வேண்டும். உப்பு நிறைந்த ஆழ் குழாய் தண்ணீரை பயன்படுத்தும் பொழுது வயல்களில் குட்டை அமைத்து நீரைத் தேக்கி வைத்து பின்னர் நாற்றங்கால் மற்றும் வயல் பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.