அரியலூர், நவ. 30: கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலத்துக்கு புதிய ரயில் பாதை திட்டத்தை தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் அடுத்த வாலாஜா நகரில் நேற்று நடந்த அக்கட்சியின் 9 ஆவது மாவட்ட மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் பத்மாவதி, சிலம்பரசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநாட்டில், மாநில குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை சட்டப் மன்ற உறுப்பினருமான சின்னதுரை, மாநில குழு உறுப்பினர் வாலண்டினா நிறை உரையாற்றினார். திருமானூர் அருகேயுள்ள வாழ்க்கை மற்றும் குருவாடி ஆகிய பகுதிகளில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும். மாமன்னர் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட சோழகங்கம் எனும் பொன்னேரியை ஆழப்படுத்தி, புள்ளம்பாடி வாய்க்கால் நீரைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள புதிய ரயில் பாதை திட்டமான கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் ஆத்தூர் வழியாக சேலம் புதிய ரயில் பாதைத் திட்டத்தை தொடங்க வேண்டும். செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாரங்களில் காகித ஆலையை தொடங்க வேண்டும். செந்துறையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஜெயங்கொண்டத்தில் தொடங்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற்சாலையில், படித்த உள்ளூர் இளைஞருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளராக இளங்கோவன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதே போல் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக மணிவேல், வெங்கடாசலம், கிருஷ்ணன், அருணன், பரமசிவம், கந்தசாமி, அம்பிகா துரைசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.முன்னதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி சிற்றம்பலம் வரவேற்றார். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் மலர்கொடி நன்றி கூறினார்.


