Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குன்னூர் மலைப்பாதையில் பழுதான கேமராக்களை மாற்ற வலியுறுத்தல்

குன்னூர், பிப்.6: குன்னூர் மலைப்பாதையில் பொருத்தி உள்ள கேமராக்கள் பழுதாகி இயங்காமல் உள்ளன. அவற்றை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த 2019ல் நீலகிரி மாவட்ட போலீசார் காட்டேரி பகுதி முதல் பர்லியார் வரை 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். குன்னூர் மலைப்பாதை அடர் வனம் என்பதால் வன விலங்குகள் அடிக்கடி சாலைக்கு வரும் போது விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றன. இதைக்கண்காணிக்கும் வகையிலும், மலைப்பாதையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டால் அதை கண்காணிக்கும் வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டன.ஆனால், ஆரம்ப காலகட்டத்தில் இயங்கி வந்த கேமராக்கள் பராமரிப்பின்றி பழுதாகின.

இதனால், சாலையோரம் குற்ற சம்பவங்களும், அத்துமீறல்களும் அதிகரித்து வருவதாக சுற்றுலா பயணிகள் புகார் எழுப்புகின்றனர். கல்லூரி மாணவர்கள் சிலர் பைக்கில் பெண்களை அழைத்து வந்து யானைகள் நடமாடும் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்வதும், சாலையோரங்களில் உள்ள தடுப்புகளின் மீது அமர்ந்து, சில்மிஷங்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், சில இருசக்கர வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே, பழுதான கேமராக்களை மாற்றி பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.