Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குஜராத்தில் இருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்தபோது பயணி மரணம்: சுற்றுப்பயணம் வந்தபோது சோகம்

பூந்தமல்லி, செப்.4: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 174 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்தபோது விமானத்தில், கணவருடன் பயணித்துக்கொண்டிருந்த தெற்கு அந்தமானைச் சேர்ந்த சபித்ரி (50) என்ற பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. தகவல் அறிந்த விமான கேப்டன், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்து, விமான நிலைய மருத்துவ குழுவினரை தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்ததோடு, விமானத்தையும் வானில் நீண்ட நேரம் வட்டமடிக்க செய்யாமல், முன்னதாக அவசரமாக தரையிறங்க அனுமதியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அதன்படி காலை 9.35 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய அந்த விமானம், முன்னதாகவே காலை 9.17 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. உடனடியாக விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி, பயணியை பரிசோதித்தனர். ஆனால் அந்த பெண் பயணி, இருக்கையில் உயிரிழந்த நிலையில் இருந்தார். இதையடுத்து அந்த பெண் பயணி உயிரிழந்ததாக மருத்துவர் அறிவித்தார். உடனே கணவர் ஸ்சோஜால் உள்ளிட்ட விமான பயணிகள் சோகத்தில் மூழ்கினர்.

சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியபோது, ஸ்சோஜால் தனது மனைவியுடன் குடும்பமாக, அந்தமானிலிருந்து குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதன்பின்பு சென்னை வழியாக, அந்தமானுக்கு திரும்புவதற்காக அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது, இந்த சோக சம்பவம் நடந்துள்ளது என்று தெரிய வந்தது.