கம்பம், ஜூலை 14: கம்பத்தில் காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கம்பம் மேற்கு வனச்சரகத்தில் உள்ள புதுக்குளத்து ஆலமரம் பகுதியில், வனத்துறையினர் நேற்று முன் தினம் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியை ஒட்டிய மாந்தோப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில், சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அவர்கள் இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால், அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையை சோதனை செய்தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட காட்டுப்பன்றி உயிரிழந்த நிலையில் இருந்தது. மேலும், பிடிபட்டவர்கள் கீழக்கூடலூர் வார்டு 1 வீரணத்தேவர் தெருவைச் சேர்ந்த சுசீந்திரன் (41), மேலக்கூடலூர் பசும்பொன் நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி (32) ஆகியோர் என்பதும், அவர்கள் காட்டுப்பன்றியை வேட்டையாடியதும் தெரிய வந்தது.
காட்டுப்பன்றியை பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவரையும் பிடித்து கம்பம் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். இது தொடர்பாக உயரதிகாரிகள் உத்தரவின்படி, இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்த காட்டுப்பன்றியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், வனத்துறை அலுவலகத்தில் புதைக்கப்பட்டது.


