காஞ்சி - ஏனாத்தூர் சாலை கோனேரிக்குப்பம் பகுதியில் ரயில்வே கேட் மீது கன்டெய்னர் லாரி மோதி பயங்கர விபத்து: ஒரு மணி நேரம் ரயில் தாமதம்
காஞ்சிபுரம், டிச. 5: காஞ்சிபுரம் - ஏனாத்தூர் சாலை கோனேரிக்குப்பம் பகுதியில் ரயில்வே கேட் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால், அப்பகுதி வாகன ஓட்டிகளும், பயணிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். காஞ்சிபுரத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று ஏனாத்தூர் வழியாக ரயில்வே கேட்டை கடக்கும்போது திடீரென லாரி ரயில் கேட் மீது உரசி மோதியதால் ரயில் கேட் இரும்பு தடுப்பு பைப் வானத்தை நோக்கி மேலே தூக்கி நின்றது.
அப்போது, ரயில் தண்டவாளத்தின் மேலே செல்லும் 25 ஆயிரம் ஓல்ட் மின்சார ஒயர் மீது உரசியதில் திடீரென தீப்பிழம்பும் தீப்பொறியும் ஏற்பட்டது. இதனால், அங்கிருந்தவர்கள் அலறி திகைத்து நின்றனர்.
அதைத்தொடர்ந்து, ரயில் கேட் மூட முடியாததால் ஏராளமாக வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. உடனே அங்கிருந்து கேட் ஊழியர் காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி ரயில் கேட்டை சரி செய்தனர். இதனால், 8.15 மணிக்கு கடக்க வேண்டிய திருமால்பூர் சென்னை பீச் செல்லும் ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக 9.15 புறப்பட்டு சென்றது. இதனால், ரயில் பயணிகளும் ரயில்வே கேட்டை கடக்க நின்ற பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து ஏனாத்தூர் செல்லும் ரயில்வே கேட் பகுதியில் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி நின்றன. இதனால், காஞ்சிபுரம் - ஏனாத்தூர் கோனேரிக்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டது. மேலும், ரயில்வே கேட்டை இடித்த லாரி டிரைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்லும் ஏராளமான ரயில் பயணிகள் ஒரு மணி நேரம் தாமதமானதால் பலர் பாதியிலேயே வீடு திரும்பினார்கள். சிலர் டிக்கெட் கவுண்டரில் கொடுத்து பணத்தை திருப்பி வாங்கிக் கொண்டு சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.