Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

காஞ்சிபுரம், மே 21: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பங்கேற்றார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையினை அணிந்திருக்க வேண்டும். சட்டமன்ற வாரியாக வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குகள் எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தனியாக ஒரு மேஜை அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் வாக்குகள் எண்ணும் மேற்பார்வையாளர் ஒருவர் வாக்குகள் எண்ணும் உதவியாளர் ஒருவர் மற்றும் நுண் பார்வையாளர் ஒருவர் மற்றும் கட்டுப்பாட்டு கருவியை பாதுகாப்பு அறையிலிருந்து கொண்டு வந்து மேற்பார்வையாளரிடம் அளிக்க ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு அலுவலக உதவியாளர் நியமனம் செய்யப்பட்டிருப்பர். வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் ஜூன் 4ம்தேதி காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையமான காஞ்சிபுரம் காரப்பேட்டையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான மையத்தில் ஆஜராக வேண்டும். வாக்கு எண்ணும் அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தவறாமல் அணிந்து வர வேண்டும்.

வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில், வாக்கு எண்ணும் பணிக்கான எழுது பொருட்கள் மற்றும் உபகரணங்கள் (பேனா, பென்சில், கத்தரிக்கோல், கால்குலேட்டர், எழுதும் அட்டை, பேப்பர், இதர பொருட்கள்) உள்ளதை சரிபார்த்து கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் அலுவலர்கள் காலை 7.45 மணியளவில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை காலை 7.30 மணியளவில் வேட்பாளர்கள், முகவர்கள் பொதுத்தேர்தல் பார்வையாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்படும்.

பின்னர், காலை 8 மணியளவில் அஞ்சல் வாக்குச்சீட்டு எண்ணும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் துவங்கும். அதன்பின், 8.30 மணியளவில், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இவிஎம்மில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும். மேலும், வாக்கு எண்ணிக்கை முடிவுற்றி இவிஎம் (EVM) களை சீலிடும் முறைபற்றியும், வாக்குப்பதிவு தொடர்பான ஆவணங்களை சீலிடும் முறைபற்றியும் மற்றும் விவிபிஏடி (VVPAT Ballot Slips) எண்ணும் நடைமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பார்த்தசாரதி, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.