Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர்கள் தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 6: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடக்கவுள்ளதாக கலெக்டர்கள் கலைச்செல்வி மோகன், அருண்ராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர். கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.

மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,69,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின் கீழ், 5ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி (10.6.2024) 10ம்தேதி முதல் 31ம்தேதி வரை என 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக்கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.