கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பள்ளி மாணவர், மாணவி நீட் தேர்வில் மாநில அளவில் முதல், 3வது இடம் பிடித்து சாதனை
கள்ளக்குறிச்சி, ஜூலை 26: நாடு முழுவதும் கடந்த மே மாதம் 4ம்தேதி நீட் இளநிலை தேர்வு நடைபெற்றது. இந்த நீட் இளநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை கடந்த ஜூன் 14ம்தேதி வெளியிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள ஆவியூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலன் ஆட்டோ ஓட்டுநர்.
இவரது மகன் திருமூர்த்தி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் +2 பயின்றுள்ளார். இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் தேர்வு எழுதி இருந்தார். அதில் 710 மதிப்பெண்களுக்கு 572 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதேபோன்று தியாகதுருகம் அடுத்த எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் விவசாயி.
இவரது மகள் மதுமிதா இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் +2 பயின்றுள்ளார். இவரும் நீட் தேர்வு எழுதியிருந்தார். அதில் 551 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மாநில அளவில் 3வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அதனையடுத்து நீட் தேர்வில் மாநில அளவில் சாதனைபடைத்த மாணவர் திருமூர்த்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அந்த மாணவனை சிறந்த முறையில் மருத்துவ படிப்பு முடித்து சிறந்த மருத்துவராக வர வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வாழ்த்தினார்.