Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்லறை தோட்டத்தில் சடலங்களை புதைக்க எதிர்ப்பு இறந்தவர் உடலை தோண்டி எடுக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்: ஆர்டிஓ நேரில் விசாரணை; திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர், மே 22: திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலங்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், இறந்தவர் உடலை தோண்டி எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் யாரேனும் உயிரிழந்தால் அவர்களது சடலங்களை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையில் புதைத்து வந்தனர். ஆனால் தற்போது அங்கே இடமில்லாததால் திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 5 ஏக்கர் நிலம் திருச்சபை சார்பில் வாங்கப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு தொழுவூர் கிராம பஞ்சாயத்தில் அந்த இடம் கல்லறைக்கு பாத்தியப்பட்டது என தீர்மானம் நிறைவேற்றி, முறைப்படி வட்டாட்சியர், கலெக்டர், வருவாய்த்துறையரிடம் சமர்ப்பித்து தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலைத்தான் முதல்முறையாக இந்த கல்லறையில் அடக்கம் செய்துள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அடக்கம் செய்த உடலை தோண்டி எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

வெளியூர்களில் இறப்பவர்களின் சடலங்களை இங்கே புதைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம், உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ஆர்டிஓ கற்பகம் நேரில் விசாரணை மேற்கொண்டபோது, நாங்கள் உடலை தோண்டி எடுப்போம் என ஊர் மக்கள் தெரிவித்தனர். அரசு விதிமுறைகளை மீறி உடலை தோண்டி எடுத்தால் கைது செய்வோம் என ஆர்டிஓ எச்சரித்தார். கிறிஸ்தவர்கள் சார்பில் கல்லறை அமைப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளனர், அதனால் புதைத்த உடலை தோண்டி எடுக்க முடியாது.

இது சம்பந்தமாக முறையாக கிராம மக்கள் சார்பில் புகார் மனு அளித்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆர்டிஓ கற்பகம் தெரிவித்தார். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஊராட்சி தலைவர் மற்றும் வருவாய்த் துறையினர் கையூட்டு வாங்கிக் கொண்டு தடையில்லா சான்றிதழ் வழங்கியதாகவும், இங்கு கல்லறை கட்ட அனுமதிக்க கூடாது என புகார் மனு அளிக்க உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதில் திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் வருவாய்த் துறையினர், 100க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர்.