Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலை, இலக்கியத்தில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், ஜூன் 12: கலை, இலக்கியத்தில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது. எனவே இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த கீழ்காணும் தகுதிகள் உடைய தனித் தன்மை கொண்ட நபர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

தனது வாழ்நாளில் தனித்தன்மையுடன் சிறப்பாக சாதனை செய்தவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருது எப்போதும் உயரிய சாதனை செய்பவருக்கே வழங்கப்படும். இவ்விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் சாதனை எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருத்தல் வேண்டும். இவ்விருது உயர்ந்த தர நிர்ணயத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படும். பத்ம விருதுகள் நாட்டிலேயே இரண்டாவது உயரிய விருதாக இருப்பதால், இவ்விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே அவர்கள் துறையில் தேசிய விருதோ அல்லது குறைந்தபட்சம் மானிய விருதோ பெற்றிருக்க வேண்டும். மேலும் இவ்விருதிற்கு உரியவரை தேர்ந்தெடுக்கும்போது, சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள், நலிவடைந்த சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டவர்கள், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பரிந்துரை செய்யப்படும். சிறந்த சாதனையாளராக இருந்து இறந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதில்லை.

இருந்தபோதும் மிக தகுதியானவர்களுக்கு இந்த விருது அறிவிக்கும் தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் இறந்திருந்ததால் அவர்கள் இவ்விருதிற்கு பரிசீலிக்கப்படலாம். இவ்விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே பத்ம விருது பெற்றவராக இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க இவ்விருது பெற்ற நாளிலிருந்து 5 வருடத்திற்கு பின்னரே விண்ணப்பிக்க முடியும். இருந்தபோதிலும் மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு கால கட்டுப்பாட்டில் விதிவிலக்கு அளிக்கப்படும். அரசு பணியாளர் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் டாக்டர், விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.மேற்காணும் தகுதிகள் பெற்றவர்கள் பத்ம விருதிற்கு ஆன்லைன் முறை மூலமே http://awards.gov.in, http://padmaaward.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்விருதிற்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி தேதி ஆகும் என திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பம் வரவேற்பு : திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 23 பள்ளி மாணவர்கள் விடுதிகள், 10 பள்ளி மாணவியர்கள் விடுதிகள் மற்றும் 1 கல்லூரி மாணவர்கள் விடுதி என மொத்தம் 34 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை வரும் 14ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை ஜூலை 15ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.