Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள்: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம். ஏப்.26: செம்மொழிநாள் விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இது குறித்து ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 அன்று செம்மொழி நாள் விழாவாக 2025ம் ஆண்டு முதல் கொண்டாடப்படவுள்ளது. செம்மொழியின் சிறப்பையும் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, பதின்ம பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மத்திய இடைநிலை கல்வி வாரியம் பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம்.

மேலும் இப்போட்டிகளில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம். இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகள் தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamil valar chithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர், முதல்வரிடம் பரிந்துரையுடன் விண்ணப்பப் படிவங்களை tamilvalarchiramnad@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 08.05.2025ம் நாளுக்குள் அனுப்பப்பெறலாம். மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.7,000, 3ம் பரிசு ரூ.5,000 என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளன. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே.9 அன்றும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மே.10 அன்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டிக்கான தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப்படும். ‘‘செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை’’சார்ந்த தலைப்பு அளிக்கப்படும். மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் மே.17 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர். ஜூன் 3ம் தேதியன்று நடைபெறவுள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். இக்கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.