சோமனூர்,செப்.26: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பேராலயத்தின் இந்தாண்டு தேர்த்திருவிழா நாளை (27ம்தேதி)கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நூற்றாண்டு பிரசித்தி பெற்ற கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலயம், கோவை மறை மாவட்டத்திற்கு முதன்மை கோவிலாகவும், தாய் கோயிலாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு அடுத்தபடியாக கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை ஆலயத்தை பசலிக்கா திருத்தலமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் ஆறாவது திருத்தலமாக செயல்படுகிறது.வரலாற்றுச் சிறப்பும், ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து மதத்தவரும் வந்து தரிசிக்ககூடிய பொது பேராலயமாக கருமத்தம்பட்டி ஜெபமாலை அன்னை கோவில் விளங்குகிறது.
இந்த ஆண்டு தேர்த்திருவிழா வருகின்ற அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை (27ம் தேதி) கொடியேற்றம் நடக்கிறது. ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கோவை மறை மாவட்ட முதன்மை குருஜான் ஜோசப் தனிஷ் தலைமையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெறும். தேர்த்திருவிழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். நாளை காலை கொடியேற்றத்துடன் இவ்வாண்டு தேர்த்திருவிழா துவங்குகிறது.