Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கம்பம் நகராட்சி அலுவலகத்தில் அரிசி கடத்தல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்: தமிழக, கேரள அதிகாரிகள் பங்கேற்பு

கம்பம்/கூடலூர் பிப். 28: கம்பத்தில் நடைபெற்ற ரேசன் அரிசி கடத்தலை தடுப்பது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக, கேரளா வருவாய்த் துறையினர் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்திச் சென்று விற்பனை செய்வது அதிகரித்து வருவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று கம்பம் நகராட்சி சார்பில் ரேசன் அரிசி கடத்தலை தடுப்பது தொடர்பாக தமிழக கேரளா வருவாய்த் துறையினர் மற்றும் புட்செல் போலீசார் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை மதுரை மண்டல துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீசன், தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி மற்றும் கேரள மாநிலம் பீர்மேடு தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் மோகனன் ஆகியோரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல்துறை மற்றும் உத்தமபாளையம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி மற்றும் கேரள மாநிலம் பீர்மேடு ரேஷன் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விவாதித்தனர். எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனையை கடுமையாக்குவதுடன், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை, தனிநபர் தகவல்கள், மொபைல் எண் உள்ளிட்டவை இரு மாநில அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும், எல்லைப் பகுதிகளில் இரு மாநில அதிகாரிகளின் கூட்டு சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.