திருத்தணி மே, 19: கனகம்மாசத்திரம் அருகே பழமை வாய்ந்த புளியமரம் திடீரென்று சாலையில் விழுந்தது. அப்போது அந்த சாலையில் வாகனங்கள் செல்லாததால், வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர். திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் - திருவாலங்காடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், முத்துகொண்டாபுரம் அருகே சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புளியமரம் பட்டுப்போய் இருந்தது. இந்நிலையில், நேற்று காலை திடீரென்று மரம் வேரோடு சாய்ந்தது. அந்த நேரத்தில் அவ்வழியாக வாகன ஓட்டிகள் யாரும் செல்லாததால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. புளியமரம் சாலையில் சாய்ந்ததால் கனகம்மாசத்திரம் - திருவாலங்காடு மார்க்கத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் திருத்தணி உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர், சாலையில் விழுந்த புளிய மரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இதனைதொடர்ந்து போக்குவரத்து சீரானது.
+
Advertisement


